Wednesday, December 06, 2006

உலகின் மிகப்பழைமையான காதல் கவிதை

மணவாளனே,
என் நெஞ்சிற்கினியவனே,
பெரும்பேரழகன் நீ,
தேனைப் போன்று இனியவனே…

மணவாளனே,
உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்
பள்ளியறைக்கு.

நீயே என்னைச் சிறைப்படுத்தினாய்.
உன் முன் நான் நடுங்குற்று நிற்கக்கடவேன்.
மணவாளனே,
உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்
பள்ளியறைக்கு.
சிங்கமே,
உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்
பள்ளியறைக்கு.

மணவாளனே,
என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.
அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.

படுக்கையறையில், தேன் சொட்ட
உன் பெரும்பேரழகை என்னைச் சுவைக்க விடு.

சிங்கமே,
என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.
அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.

மணவாளனே, உன் இன்பத்தை என்னிடமிருந்து நீ பெற்றாய்.
என் தாயிடம் சொல், அவள் சுவையாகத் தின்னக் கொடுப்பாள்.
என் தந்தையிடம் சொல், அவர் பரிசுகளைக் கொடுப்பார்.

உன் ஆன்மா-
உன் ஆன்மாவை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,
மணவாளனே,
விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.
உன் இதயம்-
உன் இதயத்தை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,
சிங்கமே,
விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.

நீ என்னைக் காதலிப்பதால், நீ என்னை தீண்டி அருள்வாய்.
என் கடவுளே, என் காவலனே, என் ஷூ-ஸின்,
என்லிலின் இதயத்தை சந்தோஷப்படுத்தியவனே,
நீ என்னை தீண்டி அருள்வாய்.

உனது இடம் தேனைப் போன்று சிறந்தது.
உன் கைகளை அதன் மீது வைத்தருள்வாய்.
உனது கையை கிஷ்பான் உடை மீது கொண்டுவருவாய்.
கிஷ்பான் ஸிகின் உடையைப் போல உன் கரங்களை அதன் மீது கிண்ணமாய் குவி்ப்பாய்.

- காமமும் காதலும் ததும்பும் இந்த பாடல்தான் இதுவரை உலக இலக்கியம் கண்ட முதல் காதல் பாடல்.

இந்த கவிதைதான் உலகில் இதுவரை நாமறிந்த காதல் இலக்கியங்களிலேயே மிகவும் பழமையான படைப்பு. இன்றைய ஈராக்கில் - அன்றைய மெசபடோமியாவின் நிப்பூர் என்ற நகர் இருந்த பகுதியில்- 1880 இல் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு டேப்லட்டில் இந்த கவிதை காணப்பட்டது.

அது சுமேரியர்களின் மொழியில் கியூனிபாஃர்ம் எனப்படும் ஆதிகால வரிவடிவத்தில் எழுதப்பட்டது. இப்போது இப்போது துருக்கியில் இஸ்தான்புல் மியூசியமான The Museum of the Ancient Orient இல் இருக்கிறது.

No comments: